விடியலை நீக்கிய தவெக அரசு..? 'மகளிர் விடியல் பயணம்' இனி 'மகளிர் பயணம்'.. தமிழகம் முழுவதும் பெயர் மாற்றம்!
திமுக ஆட்சியில் அறிமுகமான 'மகளிர் விடியல் பயணம்' இலவச பேருந்து திட்டத்தின் பெயர், தமிழகம் முழுவதும் 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. பேருந்துகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் டிஜிட்டல் காட்சிகளிலும் புதிய பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை வழங்கும் முக்கிய நலத்திட்டமான 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயர் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் புதிய பெயர்ப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் காட்சி பலகைகளிலும் "மகளிர் பயணம்" என்ற பெயரே தற்போது இடம்பெற்று வருகிறது.
திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் தனது முதல் கையெழுத்து திட்டங்களில் ஒன்றாக மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்திற்கு "மகளிர் விடியல் பயணம்" என்று பெயரிடப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, தினமும் லட்சக்கணக்கான பெண்கள் வேலை, கல்வி, வணிகம் மற்றும் அன்றாட தேவைகளுக்காக இலவசமாக அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். குடும்பங்களின் மாதாந்திர செலவை குறைக்கும் வகையில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றுவதாகவும், ஒரு பெண்ணுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1,000 வரை சேமிப்பு கிடைப்பதாகவும் பல்வேறு தரவுகள் மற்றும் அரசின் விளக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேருந்துகளை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு அரசு பேருந்திலும் "மகளிர் விடியல் பயணம்" என்ற பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த பலகைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக "மகளிர் பயணம்" என்ற புதிய பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த மாற்றம் சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்து கழகங்களின் டிஜிட்டல் காட்சிகளிலும் புதிய பெயர் பயன்படுத்தப்படுவதால், இது மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த பெயர் மாற்றம், சமீப காலமாக அரசின் பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவரும் சூழலில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே "நான் முதல்வன்" திட்டம் "தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டம்" என்றும், "முதல்வர் படைப்பகம்" திட்டம் "படைப்பகம்" என்றும் மாற்றப்பட்டிருந்தது. தற்போது அதே வரிசையில் "மகளிர் விடியல் பயணம்" திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அல்லது போக்குவரத்துத் துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ விளக்கத்தையோ வெளியிடவில்லை. திட்டத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதா அல்லது வேறு நிர்வாக மாற்றங்களும் உள்ளனவா என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
இதனால், பெயர் மாற்றம் அரசின் புதிய நிர்வாக அணுகுமுறையின் ஒரு பகுதியாகவா, அல்லது திட்டங்களை ஒரே மாதிரியான பெயர்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியாகவா மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் வரை இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் தொடர்ந்து விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.