ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்யப்படும் புகைப்படங்கள்: கடும் எச்சரிக்கை விடுத்த மிருணாள் தாக்கூர்!
தனது புகைப்படங்கள் மற்றும் அடையாளத்தை ஏஐ, டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு நடிகை மிருணாள் தாக்கூர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற போலியான பதிவுகளை உருவாக்குவதோ, பகிர்வதோ தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏஐ பயன்பாட்டுக்கு எதிராக மிருணாள் தாக்கூர் எச்சரிக்கை
சீதா ராமம், ஹாய் நன்னா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், தனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்படும் ஏஐ மற்றும் டீப்ஃபேக் பதிவுகள் குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.தனது புகைப்படங்கள், தோற்றம் அல்லது அடையாளத்தை பயன்படுத்தி போலியான மற்றும் ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கங்களை உருவாக்குவதும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்
இனிமேலும் தனது அடையாளம் அல்லது தோற்றத்தை தவறாக பயன்படுத்தி டீப்ஃபேக், ஏஐ மூலம் மாற்றப்பட்ட பதிவுகளை உருவாக்கி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிருணாள் தாக்கூர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீப காலங்களில் திரைப்பிரபலங்களை மையமாக வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக கவனம் பெற்று வருகின்றன. மிருணாள் தாக்கூர் தொடர்பாகவும் இதற்கு முன்பு ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போலியான திருமண வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

0 Comments
No comments yet. Be the first to comment.