வேளாண் பட்ஜெட்: கருப்பு உடையில் பேரவைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்தனர். முன்னதாக பொதுப் பட்ஜெட் தொடர்பாக தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். புதிய அறிவிப்புகளை வழங்குவதற்குப் பதிலாக முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி அறிவிப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
‘ரீல் அரசாங்கத்தின் பட்ஜெட்’ என விமர்சனம்
பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொதுப் பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் இல்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலினும் அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து எதிர்ப்பு
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விளைபொருட்களுக்கான விலை, கொள்முதல், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதற்கிடையே, வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments
No comments yet. Be the first to comment.