பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை... வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என்றும், வருவாயை பெருக்கவும் பற்றாக்குறையை குறைக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அப்போது, புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம் என அவர் தெரிவித்தார். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பதில் முதல் 100 நாட்கள் முக்கியமானவை என்றும், அந்த காலகட்டத்தில் 100 நாள் செயல்திட்டங்களை அரசு வெளியிடுவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பட்ஜெட்டில் வருவாயை பெருக்குவதற்கோ, வருவாய் பற்றாக்குறையை குறைப்பதற்கோ போதிய நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என விமர்சித்தார்.
“5 ஆண்டுகளில் கடன் ரூ.20 லட்சம் கோடியாகும்”
தமிழக அரசு மூன்று மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதே நிலை தொடர்ந்தால், ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை; அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக” அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு அரசு துறைகளில் சுமார் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறையிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மின்சாரத் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதே மின்தடைகளுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கான கோரிக்கைகள்
விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும், தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65 ஆயிரம் விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்

0 Comments
No comments yet. Be the first to comment.