மோட்டார் வாகன ஆய்வாளர் பணி – நேர்முகத்தேர்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதியான 228 தேர்வர்களுக்கு செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-II) பணிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதியான தேர்வர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.மோட்டார் வாகன ஆய்வாளர் பணியில் 110 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 2,176 பேர் விண்ணப்பித்த நிலையில், 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2018-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் விதிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட வேண்டியிருந்தது. ஒரு பணியிடத்திற்கு இருவர் என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட வேண்டிய நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல் 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் வழியாக உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், தேர்வு மற்றும் பணி நியமன நடைமுறைகளில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிகளின் அடிப்படையில், மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு 228 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும்என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. வழங்கிய அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், பணி அனுபவச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
பல ஆண்டுகளாக முடிவுக்காக காத்திருந்த தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தத் தேர்வு நடைமுறைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், தேர்வர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் அடுத்தகட்ட பணி நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.