த.வெ.க VS த.வா.க: பெரம்பூரில் கட்சிப் பெயர் மோதல்! | தேர்தல் அதிகாரி நோட்டீஸ் | மக்கள் குழப்பமடைவதாக புகார்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே மாதிரியான கட்சியின் சுருக்கப் பெயரால் (TVK) வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருவதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெயரால் வந்த வினை:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி (TVK) ஆகிய இரு கட்சிகளுமே தங்களது சுருக்கப் பெயராக "TVK" என்பதையே பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர், தனது பரப்புரையின் போது திட்டமிட்டே "TVK" என்ற பெயரை முன்னிலைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தவெக-வின் புகார்:
இது குறித்துத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அளித்துள்ள புகாரில், "எங்களது கட்சித் தலைவர் விஜய் அவர்களின் நற்பெயரையும், தவெக (TVK) என்ற அடையாளத்தையும் பயன்படுத்தித் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார். இது வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மக்களைத் திசைதிருப்பும் இந்தச் செயலைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் அதிகாரி அதிரடி:
இந்தப் புகாரைப் பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி, பெரம்பூர் தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சிப் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், தேர்தல் விதிமுறை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.