விலை உயர்வு எதிரொலி: கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டுவர அரசு முடிவு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கையிருப்பு வெங்காயம் விற்பனை
சந்தையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை நேரடியாக சில்லறை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.
‘கண்டா எக்ஸ்பிரஸ்’ ரயில்கள்
நாசிக்கிலிருந்து டெல்லி, சென்னை, கொச்சி மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயத்தை கொண்டு செல்ல மத்திய அரசு ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ ரயில்களை இயக்க உள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், இதுபோன்ற சிறப்பு ரயில் சேவை கடைசியாக 2024 அக்டோபரில் நாசிக்கிலிருந்து டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது.
சென்னையில் ரூ.58
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ.33-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.58 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு ரூ.35-ஆக இருந்த வெங்காயத்தின் சில்லறை விலை தற்போது ரூ.65-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் காரிப் பருவ வெங்காய உற்பத்தி 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
1.2 லட்சம் டன் கொள்முதல்
நடப்பு நிதியாண்டிற்கான கையிருப்புக்காக விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.