அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு!
அதிமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட புதிய பொதுநல வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார். சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த பி.ஜி. சந்திரசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய பொதுநல வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் எச்சரிக்கை :
விசாரணையின் போது நீதிபதிகள், "இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அதிமுக கட்சியின் கொறடா மூலமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் மீதான வாதங்கள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. அவ்வாறு இருக்கும்போது, சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பினர் இதே கோரிக்கையுடன் அடுத்தடுத்து புதிய மனுக்களைத் தாக்கல் செய்வது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது போன்ற தொடர் மனுக்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ள முக்கிய வழக்கின் போக்கை திசைதிருப்பும் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த தேவையற்ற பொதுநல மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
வழக்கு வாபஸ் & தள்ளுபடி:
நீதிமன்றத்தின் இந்த கடுமையான அணுகுமுறையை அடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக முறையிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

0 Comments
No comments yet. Be the first to comment.