பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் - உதயநிதி...
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறுத்தினால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான பரந்தூர் புதிய பசுமை வழி சர்வதேச விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் இன்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய நிறுவனங்கள் வரத் தயங்கும்:
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் முந்தைய கழக ஆட்சியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்பட்டு, இதற்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், வெறும் அற்ப அரசியல் காரணங்களுக்காக இந்த உன்னதத் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும். பரந்தூர் திட்டத்தை நிறுத்துவதால் சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழலும் உருவாகும்" என எச்சரித்துள்ளார்.
திமுக வெளிநடப்பு:
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக உறுப்பினர் எ.வ.வேலு மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வலியுறுத்தினர். ஆனால் விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.