அவசரமாக முடிப்பதைவிட முழுமையாக நிறைவேற்றுவதே நோக்கம்; சுற்றுச்சூழல் பணிகள் நீட்டிப்பு - அண்ணாமலை
வி தி லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை மற்றும் பசுமைப் பணிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில் செப்டம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் மாதத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த சமூகப் பணிகள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வலர்களுக்கு நன்றி:
எதிர்காலச் சமூகத்தின் நலனுக்காகவும், நமது தலைமுறைகளின் நலனுக்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னலமற்ற முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் வி தி லீடர்ஸ் அமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக்கூடியது அல்ல; அது ஒரு தொடர்ச்சியான பயணம். சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உங்களது விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களை எல்லாம் நமது அமைப்பின் பணிகளுக்காக நீங்கள் செலவிட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.
கூடுதல் கால அவகாசம் ஏன்?
இன்று வரை தமிழகம் முழுவதுமாக 175 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாநிலம் முழுவதும் நட்டுள்ளோம்.
பல இடங்களில் ஆரம்பித்த பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதும், மேலும் இவை தொடர்பாக மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மூலம் புதிதாகக் கண்டறிந்துள்ள பணிகளையும் நிறைவேற்றுவது அவசியம். சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இந்தப் பணிகளை அவசர அவசரமாக முடிப்பதை விட, அவை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அதன் பலன் அந்தப் பகுதிகளுக்கும், மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். சமீபத்தில் நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் போன்ற இயற்கைக் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும், அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்திற்கான முன்னெடுப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்புமாகும்.
பணிகள் நீட்டிப்பு மற்றும் அடுத்தகட்ட திட்டம்:
எனவே, நமது வி தி லீடர்ஸ் அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்ட தன்னலமற்ற உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், "தூய்மையான மற்றும் சூரிய ஒளி நிறைந்த தமிழ்நாடு" பிரசாரத்தை மேலும் ஒரு மாதத்திற்கு (செப்டம்பர் மாத இறுதி வரை) நீட்டிக்கிறோம்.
ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும்.
அதேபோல, ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்காகத் திட்டமிடப்பட்டிருந்த "பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம்" குறித்த சமூகப் பணிகள், தற்போது அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 Comments
No comments yet. Be the first to comment.