முதல்வர் விஜய் – அஜித் சந்திப்பு? சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் புதிய எதிர்பார்ப்பு
சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் அஜித் குமார் பங்கேற்பதால், இருவரின் சந்திப்பை காண ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup – Silverstone Round கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, அஜித் குமார் பங்கேற்கும் 2026 Michelin Le Mans Cup தொடரின் 5ஆவது சுற்று செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற Silverstone Circuit-ல் நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ பந்தயத் தகவலின்படி, Silverstone Grand Prix Circuit 5.891 கி.மீ. நீளம் கொண்டது; 18 திருப்பங்களைக் கொண்டது.
இந்தப் போட்டியில் அஜித் குமார், தனது Ajith RedAnt by Virage அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் போட்டியிடுகிறார். அவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Romain Vozniak இணைந்து ஓட்டுகிறார். மேலும், முன்னாள் Formula 1 வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் Aditya Patel ஆகியோரும் Ajith RedAnt Racing அணிக்காக களமிறங்குகின்றனர்.
முக்கியமாக, இந்த Silverstone சுற்றின் பிரதான இரண்டு மணி நேர பந்தயம் "செப்டம்பர் 12ஆம் தேதி "நடைபெற உள்ளது. 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பாக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடியை அசைத்து பந்தயத்தை தொடங்கி வைக்க உள்ளதாக Le Mans Cup நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருவரும் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மற்றொருவர் சர்வதேச கார் பந்தய வீரராகவும் புதிய துறைகளில் பயணித்து வருகின்றனர். இதனால் Silverstone-ல் இருவரும் சந்திக்கும் தருணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு அஜித் குமார் தனது ஆதரவையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இதனால், Silverstone கார் பந்தயம் விளையாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கும் முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது. இருவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், அந்த தருணத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.