யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு எதிராகவும் உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்டோபர் 15 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
வர்த்தகர்களுக்கு மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றுக்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம் ரூ.2,000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூ.5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. இக்கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாகவும், கடுமையாகவும் பாதிக்கும்.
வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை நடைமுறைப்படுத்தினால், அந்த கூடுதல் கட்டணச் செலவும் இறுதியில் பொருட்களின் மீதே ஏற்றப்படும். இதனால் ஒட்டுமொத்தமாக விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இச்சேவையை வழங்கிவரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும், நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். இது அவர்களின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.
ஒன்றிய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.