தமிழ்நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஒரே நாளில் 244 பேருக்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி ஒரே நாளில் 244 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் 87 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் கண்காணிப்பு, கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிறப்பு டெங்கு வார்டுகள் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 17-ஆம் தேதி ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 87 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 15-ஆம் தேதி மாநிலத்தில் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி ஒரே நாளில் 244 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மழையால் தண்ணீர் தேங்கும் இடங்கள் அதிகரிப்பது, டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் தேவை:
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது முக்கியம். அதிக காய்ச்சல், தலைவலி, உடல் மற்றும் மூட்டு வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைக்கு காய்ச்சல் தொடர்ந்து நீடித்தாலோ, உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, பெற்றோர் தாமாக மருந்து கொடுப்பதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. வீடு மற்றும் பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்றுவது, கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை தொடர்ந்து சுத்தம் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் முக்கியம். மாநிலம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று மட்டும் 87 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பருவமழை காலத்தை முன்னிட்டு கொசுக்கள் உற்பத்தியாவது அதிகரித்துள்ளதால், குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மழை மற்றும் வெயில் மாறி மாறி வரும் காலநிலையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கினாலும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இந்தக் கொசுக்கள் மூலமாக டெங்கு வைரஸ் பரவுகிறது. வரவிருக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொசு பெருக்கத்துக்கு சாதகமான சூழல் ஏற்படக்கூடும் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.