கேரளா | திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி, கோட்டயம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளனர்.
கேரளா:
கேரளாவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பநிலைக்கு மத்தியில் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இடுக்கி, கோட்டயம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தின் வட்டவடா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டப்புழா ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோட்டயம் மாவட்டத்திலும் மழை காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வானிலை தொடர்பான SMS எச்சரிக்கைகள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், நிலைமையை மணிக்கு ஒருமுறை கண்காணித்து மதிப்பிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மலப்புரம் மாவட்டத்தின் நிலைமையை சமாளிக்க சிறப்பு பேரிடர் மேலாண்மை படைக் குழுவை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.