ஏஐ வீடியோ என்றால் கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ்அப்பில் வரும் சூப்பர் வசதி!
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற மீடியாவை பயனர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வாட்ஸ்அப் புதிய AI Content Label வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வசதி தற்போது வாட்ஸ்அப் சேனல்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களிடம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உண்மையான புகைப்படம் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம் அல்லது வீடியோவை வேறுபடுத்துவது சிரமமாகி வருகிறது. இதற்கு உதவும் வகையில், வாட்ஸ்அப் தனது Channels அம்சத்தில் AI Content Label என்ற புதிய வசதியை கொண்டு வருகிறது.
இந்த வசதியின் மூலம், ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படம், வீடியோ உள்ளிட்ட மீடியாவை சேனல் நிர்வாகிகள் தனியாக அடையாளப்படுத்த முடியும். லேபிள் சேர்க்கப்பட்டதும், அந்த சேனலைப் பின்தொடரும் பயனர்களுக்கும் அது தெளிவாகத் தெரியும்.
எப்படி செயல்படும்?
சேனல் நிர்வாகி AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட மீடியாவை பதிவிட்ட பிறகு, அந்த பதிவை அழுத்திப் பிடித்து “Add AI content label” என்ற புதிய ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். லேபிள் சேர்க்கப்பட்டவுடன், அந்த பதிவின் மீடியா பகுதியில் AI Content என்ற அடையாளம் தோன்றும்.
மேலும், ஒருமுறை AI Content Label சேர்க்கப்பட்ட பிறகு அதை மீண்டும் நீக்க முடியாத வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு AI பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய கூடுதல் தகவல் கிடைக்கும்.
எந்த ஏஐ கருவியாக இருந்தாலும் லேபிள் செய்யலாம்
இந்த வசதி மெட்டாவின் சொந்த AI கருவிகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ChatGPT, Gemini அல்லது பிற AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட மீடியாவுக்கும் இந்த லேபிளைப் பயன்படுத்த முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்
முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த வசதி வெளியிடப்பட்டது. தற்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களிடமும் இதன் வெளியீடு தொடங்கியுள்ளது. iOS-ல் இந்த வசதி WhatsApp beta 26.34.10.70 பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட TestFlight பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வசதி இன்னும் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் பொதுவாகக் கிடைக்கவில்லை. படிப்படியாக அதிகமான பயனர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.