"மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள்(செப்டம்பர் 28) செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்"
முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி மதுரை செல்ல உள்ள நிலையில், அன்று மாலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், அவரது வருகையை முன்னிட்டு காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள், செப்டம்பர் 28-ம் தேதி மதுரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா முதலில் உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது அதே செப்டம்பர் 28-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பகல் 1 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், அவரது பயணத்தையொட்டி விமான நிலையம் முதல் ராஜாஜி அரசு மருத்துவமனை வரையிலான வழித்தடம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுவதால், கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களை சீரமைத்து வர்ணம் பூசும் பணிகளும், சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் வருகையையொட்டி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் திரள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.