“ராஜினாமா செய்துவிட்டு அதே பதவிக்கு போட்டியிடுவது வெட்கக்கேடானது” – சீமான் பாய்ச்சல்!
த.வெ.க. அரசின் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக உள்ளதாக விமர்சித்துள்ள சீமான், கடன் சுமையில் உள்ள தமிழகத்தில் தொடர்ந்து இலவசத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பே மாநிலத்தின் நிதி நிலைமை தெரியாதா என்றும் அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மற்றும் அறிவிக்கப்படும் திட்டங்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், ஆட்சியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
மேலும், த.வெ.க. அரசின் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதாகவும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறித்து தெளிவு இல்லை என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 2026-27 நிதிநிலை அறிக்கை மற்றும் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஏற்கனவே கடன் சுமையில் உள்ள நிலையில், தொடர்ந்து இலவசத் திட்டங்களை அறிவித்து அவற்றை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே மாநிலத்தின் நிதி நிலைமை தெரிந்திருந்த நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.73,900 கோடி என்றும், எரிவாயு சிலிண்டர், இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவுகள் ஏற்படும் என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
மின்சாரம் இல்லாத நிலை
அரசுக்கு வருவாய் வருவதை இலவசமாக அறிவித்து விட்டால் எப்படி நிர்வாகம் பண்ண முடியும். நா.த.க.வை பொறுத்தவரை இலவசம் என்பது கிடையாது என தெளிவாக உள்ளோம். மின்சாரம் இல்லாத போது எதற்கு இலவச மின்சாரம். 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கையெழுத்து போட்ட பிறகு தான் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நா.த.க. ஆட்சியில் இலவச மின்சாரம் கிடையாது. ஆனால் தடையற்ற மின்சாரம் தருவோம்.
சத்தியம் எங்குள்ளது
சத்தியபாமாவில் சத்தியம் எங்குள்ளது. சாவித்திரி நடிப்பையும், தம்பி விஜய் நடிப்பையும் வேட்பாளர் சத்தியபாமா மிஞ்சிவிட்டார். இன்னும் த.வெ.க.-தி.மு.க. என பேசி வருகிறார். த.வெ.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களை சொல்ல வேண்டும். ஆனால் சொல்வதற்கு தான் ஒன்றுமில்லை. ஆட்சி மாறி இருக்கிறது. ஆள் மாறி இருக்கிறது. ஆனால் ஆட்சி முறை மாறவில்லை.
விஜய் என்ன வேஷம் போடுகிறார் என அவருக்கே தெரியவில்லை. வறண்ட நிலத்திற்கு ஒரு மழைத்துளி போல நா.த.க.வுக்கு தேவை ஒரு வெற்றி. தாராபுரம் மக்கள் தன்மானமுள்ள மக்கள் என காட்டுங்கள். விலகிய பதவி உங்களுக்கு இல்லை என காட்டுங்கள். இன்னும் சிலர் கட்சி மாற உள்ளனர். இரண்டு தொகுதியிலும் த.வெ.க. தோற்றால்தான் கட்சி மாற உள்ளவர்களுக்கு பாடமாக அமையும். இப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதிலேயே அதிகம் கொடுப்பது த.வெ.க. தான். இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments
No comments yet. Be the first to comment.