இளைஞர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறதா மோடி அரசு?
டெல்லி ஜந்தர் மந்தரில் CJP அமைப்பினர் நடத்தும் போராட்டம், நிர்வாகிகள் கைது, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறித்து விரிவாக அறியுங்கள்.
இளைஞர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறதா மோடி அரசு?
டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் ஆதரவுக்கொடுத்து வருகின்றனர்.
'இந்த மோடியால் எத்தனை இளைஞர்களைத்தான் ஒடுக்க முடியும்? எத்தனை இளைஞர்களைத்தான் அடக்க முடியும்?" என்ற கேள்வியோடு நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "இளைஞர்களை ஒடுக்க நினைத்தால், அரசியலில் இல்லாதவர்கள்கூட வீதிக்கு வந்து போராடத் தொடங்குவார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தனை சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
CJP அமைப்பின் தொடர் போராட்டங்கள்:
'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) நிறுவனர் அபிஜித் தீபக் தலைமையில், இந்திய இளைஞர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கொடியேற்றி அமைதியான முறையில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராகுல்காந்தியின் பகிரங்கக் குற்றச்சாட்டுகள்:
தேர்தல் நடத்துவதில் நிலவும் குளறுபடிகள், போலி வாக்காளர்களை ஓட்டுப் போட வைப்பது மற்றும் 'SIR' நடைமுறையைக் கொண்டுவந்து உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி 'வோட் சோரி' (Vote Chori) செய்துதான் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
பீகார் தேர்தலின் போது 125 வயதுடைய மிந்தா தேவி மற்றும் இத்தாலியில் வசிக்கும் ஒரு பெண் எனப் பலரது பெயர்கள் SIR வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததையும், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகக் காட்டி அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதையும் ராகுல்காந்தி சுட்டிக் காட்டியிருந்தார்.
தலைவர்கள் கைது மற்றும் கண்டனங்கள்:
இந்த விவகாரங்களுக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி CJP அமைப்பு தேர்தல் ஆணையரை எதிர்த்து போராடி வரும் நிலையில், ஜந்தர் மந்தரில் அமைதியாகக் கொடியேற்றிப் போராடிய CJP அமைப்பின் தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோரை டெல்லி காவல்துறை கைது செய்து காவலில் அடைத்துள்ளது.
மக்களின் ஜனநாயகக் குரலை எழுப்பிப் போராடுபவர்களைக் கைது செய்வது கோழைத்தனம் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள CJP நிர்வாகிகளுக்குத் தேவையான அத்தனை சட்ட உதவிகளையும் திமுக வழங்குமென மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரித்துள்ளதும் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.