விபத்தில் மூழ்கிய சரக்குக் கப்பல்! கடலில் மிதக்கும் ஐபோன்கள்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் GFS Pride சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாகக் கூறப்படும் நிலையில், அதிலிருந்த ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கடலில் மிதப்பதாக வெளியாகும் வீடியோக்கள் கவனம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கின் கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.
ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிங்கப்பூர் கொடியுடன் சென்ற GFS Pride என்ற பிரமாண்ட சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது. ஈரானால் தடை செய்யப்பட்ட கடல் பாதையில் பயணித்த இந்த கப்பல், அங்கு வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பிடித்து கடலில் மூழ்கியது.
சுமார் 2,500 கண்டெய்னர்களுடன் சென்ற இந்தக் கப்பல் மூழ்கியதால், அதிலிருந்த பல கண்டெய்னர்கள் உடைந்து விலையுயர்ந்த பொருட்கள் கடலில் மிதக்கத் தொடங்கின. குறிப்பாக, ஆயிரக்கணக்கான ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வெளிநாட்டு வாசனை திரவிய பாட்டில்கள் கடல் நீரில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், சிறிய படகுகளில் சென்று அவற்றை மொத்தமாக அள்ளிச் செல்லும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கப்பல் விபத்தா அல்லது புதையலா என்று பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த வீடியோக்கள் இருந்தாலும், இதன் பின்னணியில் பெரும் போர் பதற்றம் மறைந்துள்ளது. இந்த விபத்து நடந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி ஈரானுக்குச் சொந்தமான மிகவும் ஆபத்தான ஒரு கடல் வழியாகும். அமெரிக்காவுடனான மோதல் போக்கு காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கொண்டு செல்லும் இந்த முக்கியப் பாதையை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.மேலும், ஈரானின் IRGC படையினர் இந்த பிரதான கடல் வழியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தங்களது அனுமதியின்றி வரும் கப்பல்கள் மீது எவ்வித இரக்கமுமின்றி ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அங்குள்ள மாற்றுப் பாதைகளில் ஏராளமான கடல் கண்ணிவெடிகளை ஈரான் படையினர் வைத்துள்ளனர். இதனால் ஹார்முஸ் ஜலசந்தி உலகிலேயே மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. இங்கு பயணிக்கும் எந்தவொரு கப்பலும் பாதுகாப்பாகத் திரும்பி வரும் என்பதற்கு தற்போது எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையே இந்த GFS Pride கப்பல் விபத்து உணர்த்துகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.