பள்ளி வளாகத்தில் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை - சிசிடிவி வீடியோ வைரல்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்தில் புகுந்த சிறுத்தை:
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அங்கு சுற்றித் திரிந்த மூன்று நாய்களைக் கண்ட அந்தச் சிறுத்தை, அவற்றை வேட்டையாடத் தொடங்கியது. இதில் தப்பியோட முயன்ற ஒரு நாயைப் பிடித்த சிறுத்தை, அதை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
இந்தச் சம்பவம் இரவு நேரத்தில் நிகழ்ந்ததாலும், பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) சிறுத்தை நாயை வேட்டையாடித் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே சிறுத்தை தாராளமாக உலா வந்து வேட்டையாடிய சம்பவம், அப்பகுதி மக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் அந்தச் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகமும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.