தமிழகத்தில் தொடரும் சோகம்: செஞ்சி சிறுமி ஹேமலதாவை தொடர்ந்து அந்தியூரில் மேலும் ஒரு மாணவி மாயம்!
செஞ்சியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 14 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஈரோடு அந்தியூரில் 13 வயது மாணவி நிவேதிதா இன்று பள்ளிக்குச் சென்றபோது காணாமல் போயுள்ளார். அடுத்தடுத்து மாணவிகள் மாயமாகும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது மாணவி இன்று பள்ளிக்குச் சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சியில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தங்கி, அப்பகுதியில் உள்ள ஆதேஷ் கல்வி நிறுவனத்தில் சமையலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாக சீருடையுடன் புறப்பட்டுச் சென்ற இவரது 13 வயது மகள் நிவேதிதா, பள்ளிக்குச் செல்லவில்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது. மாணவி மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மாயமான சிறுமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், ஈரோட்டில் 13 வயது மாணவி காணாமல் போயுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தனிப்படைகள் விசாரணையைத் துரிதப்படுத்தி இரண்டு சிறுமிகளையும் பத்திரமாக மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.