விளையாட்டு விபரீதமான சோகம்: 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி - மகனைப் பாதுகாக்க சடலத்தை வீசிய தாய் கைது!
மதுரை அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது 10 வயது சிறுவன் விளையாட்டாக கழுத்தை இறுக்கியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மகனின் தவற்றை மறைக்க, உயிரிழந்த சிறுவனின் உடலை பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்த தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு காவல் எல்லைக்கு உட்பட்ட தனியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரிய கருப்பன் - சத்யா தம்பதியினருக்கு முத்துவேல் என்ற 7 வயது மகன் இருந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அடைக்கலம் காத்து அம்மன் கோயில் அருகே விளையாடச் சென்ற சிறுவன் மாலை வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மகன் கிடைக்காததால், சிறுவனின் தாயார் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 90 காவலர்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு முழுவதும் சிறுவனைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. மறுநாள் காலை, தனியமங்கலம் ராஜாங்கம் பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீடு ஒன்றில் சிறுவன் முத்துவேல் சடலமாகக் கிடப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மர்மமான முறையில் சிறுவன் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மரணம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் உண்மைகள் வெளிவந்தன. சம்பவத்தன்று முத்துவேலும், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த 10 வயது சிறுவன், விளையாட்டாக முத்துவேலின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கியுள்ளான். இதனால் மூச்சுத் திணறிய முத்துவேல், அங்கிருந்து தப்பித்து அந்தச் சிறுவனின் வீட்டிற்கே சென்று தண்ணீர் கேட்டுள்ளான். அப்போது அங்கிருந்த அந்த 10 வயது சிறுவனின் தாயார் சந்தியா கண்முன்னாலேயே முத்துவேல் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவன் இறந்ததைக் கண்ட சந்தியா, உடனடியாக மருத்துவமனைக்கோ அல்லது போலீசுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக, தனது மகனின் செயலை மூடி மறைத்து அவனைக் காப்பாற்ற முடிவு செய்தார். இதற்காக, இறந்த சிறுவன் முத்துவேலின் உடலை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று அந்தப் பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையில் இந்த உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, கொலையை மறைத்து ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காகத் தாய் சந்தியாவை போலீசார் கைது செய்தனர். 10 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சிறுவர்களின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்து ஒரு உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

0 Comments
No comments yet. Be the first to comment.