பயணியாக ஆட்டோவில் ஏறிய 'எஸ்கேப்' கைதி: சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்!
சாதாரண பயணியைப் போல ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற கைதியை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த காவலர் நடுவழியில் மடக்கிப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்த பரபரப்பு சம்பவம்
முத்துநம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னக்காளம் என்ற ஆட்டோ ஓட்டுநர் வழக்கம் போல சவாரிக்குச் சென்றுள்ளார். கல்லூரி ஒன்றின் அருகே ஒரு பெண் பயணியை அவர் ஏற்றிக் கொண்ட போது, அங்கிருந்த இளைஞர் ஒருவரும் அந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். தன்னிடம் ரொக்கப் பணம் இல்லை என்றும், போன் செய்து ஏடிஎம் மூலமாகப் பணம் தருவதாகவும் அந்த இளைஞர் ஓட்டுநரிடம் எந்தவித பதற்றமுமின்றி இயல்பாகப் பேசியபடியே வந்துள்ளார். ஆட்டோ கானாவிலக்கு பகுதியைக் கடந்து, அங்குள்ள மருத்துவமனை மற்றும் மாத்திரை குடோன் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பின்தொடர்ந்து வந்த காவலர் (ஏட்டு) ஒருவர், திடீரென ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளார். ஆட்டோவை நிறுத்திய காவலர், வண்டியை உடனடியாக காவல் நிலையத்திற்கு விடுமாறு ஓட்டுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவலர் ஆட்டோவை மடக்கிய பிறகே, பயணியாக தன்னிடம் இயல்பாகப் பேசிய அந்த இளைஞர் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி என்பது ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆட்டோவில் வந்த பெண் பயணி உடனடியாக நடுவழியில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டார். பின்னர், காவலரும் பிடிபட்ட கைதியும் அதே ஆட்டோவில் ஏறிக்கொள்ள, ஆட்டோ நேராகச் சிறையை நோக்கிச் சென்றது.சிறை வளாகத்திற்குச் சென்றடைந்ததும், தப்பியோடிய கைதி எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். "எனக்கு அவர் தப்பியோடிய கைதி என்றே தெரியாது, சாதாரண பயணிகளைப் போலத்தான் ஆட்டோவில் ஏற்றினேன். காவலர் மடக்கிய பிறகே எனக்கு உண்மை புரிந்தது" என ஆட்டோ ஓட்டுநர் சின்னக்காளம் நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.