அன்பில் மகேஷின் 400 கோடி லஞ்ச வழக்கு: தொழிலதிபர் சண்முகப்பிரியா வீட்டில் அதிரடி ரெய்டு!
தனியார்ப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகப் பதியப்பட்ட வழக்கில், அன்பில் மகேஷுடன் தொடர்புடைய தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வீட்டில் முக்கிய ஆவணங்களைத் தேடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி பெற்றுத் தருவதற்காக 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த பிரம்மாண்ட மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் பதுக்கப்பட்ட பணத்தை மீட்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பெருங்குடியில் உள்ள தொழிலதிபரும் துணிக்கடை உரிமையாளருமான சண்முகப்பிரியாவின் வீட்டில் 10 பேர் கொண்ட போலீஸ் படை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. சண்முகப்பிரியாவுக்குச் சொந்தமான இந்த பெருங்குடி வீடு, தற்போது ஒரு ஆசிரியருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் இருந்து தப்புவதற்காக, வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆவணங்களை இந்த வாடகை வீட்டில் அவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே போலீசார் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 10 நாட்களுக்கு முன்பு நீலாங்கரையில் உள்ள சண்முகப்பிரியாவின் மற்றொரு வீட்டில் நடந்த சோதனையில் பணப்பரிமாற்றம் தொடர்பான சில ஆவணங்கள் சிக்கின. கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களான உமாசங்கர் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவர், லஞ்சமாக வசூலித்த பணத்தின் ஒரு பகுதியை சண்முகப்பிரியாவிடம் கொடுத்ததும், அந்தப் பணத்தைக் கொண்டு குறுகிய காலத்திலேயே அவர் புதிய பள்ளிக்கூடம் ஒன்றை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
வசூலிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் பணம் எங்கு பதுக்கப்பட்டுள்ளது, வேறு யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பதைக் கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறையில் உள்ள அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலத்தில் தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை கைது செய்தால் மட்டுமே இந்த பணப்பரிமாற்றம் குறித்த முழு விவரங்களும் வெளிவரும் என்பதால், அவரைப் பிடிக்கும் பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.