இந்த வார ஓடிடி ரிலீஸ்: புது படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழுப் பட்டியல்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ‘பத்தா’, ‘சிக்மா’, ‘இம்மார்ட்டல்’ உள்ளிட்ட திரைப்படங்களும், ‘லவ் ஆல்வேஸ்’, ‘அக்கா’ போன்ற வெப் தொடர்களும் வெளியாக உள்ளன. எந்தப் படம் எந்தத் தளத்தில் வெளியாகிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வாரம் எந்தத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அதேபோல், பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்களும் இணையத் திரைப்படத் தளங்களில் வெளியாகத் தயாராக உள்ளன.
"பத்தா"
இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான திரைப்படம் ‘பத்தா’. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாஸ்டர் சாய் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், பேபி சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"சிக்மா"
தமிழக 'முதல்வர் விஜய்யின் மகன்' ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜாபி, கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 30ஆம் தேதி இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"இம்மார்ட்டல்"
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள திரைப்படம் ‘இம்மார்ட்டல்’. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியான இப்படத்தில் டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஒரே வீட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திகில் மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படம், காதல் மற்றும் கற்பனை அம்சங்களையும் கொண்டுள்ளது. இப்படம் அக்டோபர் 30ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"டார்க் ஹெவன்"
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. சின்னத்திரையில் பிரபலமான சித்து கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரித்விகா, தர்ஷிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சரண், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 30ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"லவ் ஆல்வேஸ்"
மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘லவ் ஆல்வேஸ்’. இதில் கௌரி கிஷன், ஜெயபிரகாஷ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொரியத் தொடரின் கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டுள்ளது.
வயது முதிர்ந்த தம்பதியினருக்கும் இளம் தம்பதியினருக்கும் இடையில் ஏற்படும் விசித்திரமான உடல் மாற்றம் (Body Swap), அதனால் உருவாகும் குழப்பங்கள், காதல் மற்றும் குடும்ப நகைச்சுவை ஆகியவை இந்தத் தொடரின் முக்கிய அம்சங்களாக உள்ளன. மொத்தம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் தொடர் அக்டோபர் 30ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"டோண்ட் டிரபிள் தி டிரபிள்"
இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் "ஃபகத் பாசில்" கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சாரா பலேகர் மற்றும் சௌரப் சச்தேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ். ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா மற்றும் அர்லா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
கற்பனை மற்றும் நகைச்சுவை அம்சங்களைக் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"அக்கா" வெப் தொடர்
நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடர் ஓடிடி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரில்லர் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
அதிகாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தேவின் மாறுபட்ட கதாபாத்திரங்கள் இந்தத் தொடரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அக்டோபர் 30ஆம் தேதி இந்தத் தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.