போக்சோ குற்றவாளியைக் காக்க பேரம்; சிறுமியைப் பொய் சொல்லத் தூண்டிய எஸ்.ஐ சஸ்பெண்ட்!
: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே போக்சோ வழக்கில் கைதான நபரைக் காப்பாற்ற லஞ்சம் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியையே பொய் சாட்சி சொல்லத் தூண்டிய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட தொண்டி அருகே அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பெற்ற மகளுக்கே தந்தை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருக்கும் அந்த நபரை ஜாமீனில் வெளியே கொண்டுவர அவரது உறவினர்கள் தீவிரமாக முயற்சி செய்தனர். அப்போது, தொண்டி காவல் நிலையத்தில் நீதிமன்றப் பணிகளைக் கவனித்து வரும் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஆசைக்குமார் என்பவரை அவர்கள் அணுகினர். அவரும், தான் சொல்வதைக் கேட்டால் குற்றவாளியை எளிதாக ஜாமீனில் எடுக்கலாம் எனக் கூறி, அதற்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கியதோடு மட்டுமில்லாமல், வழக்கை நீர்த்துப்போகச் செய்ய சட்டவிரோதமான யோசனை ஒன்றையும் அந்த எஸ்.ஐ வழங்கியுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேசி, "தனக்கு பாலியல் தொல்லை எதுவும் நடக்கவில்லை என்றும், தான் கோபத்தில் பொய்யாக புகார் அளித்துவிட்டேன்" என்றும் நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்லும்படி உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்.
இப்படிச் செய்தால் வழக்கில் இருந்து குற்றவாளியை சுலபமாக விடுவித்துவிடலாம் எனத் தொலைபேசியில் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். எஸ்.ஐ பேசிய இந்தத் தொலைபேசி உரையாடலை பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆடியோவாகப் பதிவு செய்தனர். பின்னர், அந்த ஆடியோ ஆதாரத்துடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (எஸ்.பி) நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் எஸ்.ஐ மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ஆசைக்குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.