செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் புதிய திருப்பம்! 200 மீட்டர் தொலைவில் நள்ளிரவில் நடந்தது என்ன? சிபிசிஐடி விசாரணை தீவிரம்
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவைத் தட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது
விழுப்புரம்: செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறுமி காணாமல் போன அன்று இரவு, அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத சிலர் தட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு வீட்டில் தூங்கியுள்ளார்.
மறுநாள் அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் தேடியும் சிறுமி கிடைக்காததால், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமியைக் கண்டுபிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகள், விவசாய நிலங்கள், கிணறுகள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. டிரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு
பல நாட்களாகத் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.மேலும், சிறுமி படித்த பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள், மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததுடன் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்தனர்.சிறுமியின் சகோதரி படிக்கும் கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தியதுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் செல்போன் டவர் தரவுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்?
இந்தச் சூழலில், சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் இரவில், அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத சிலர் தட்டியதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். நள்ளிரவில் வந்தவர்கள் யார், அவர்கள் எதற்காகக் கதவைத் தட்டினார்கள், அந்தச் சம்பவத்துக்கும் சிறுமி மாயமானதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுமி காணாமல் போய் பல நாட்களாகியும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காதது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் நடந்த இரவில் என்ன நடந்தது, சிறுமி எவ்வாறு காணாமல் போனார், இதற்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை விரைவில் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்பதே தற்போது முக்கியமானதாக உள்ளது. விசாரணையில் கிடைக்கும் அடுத்தடுத்த தகவல்கள் இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.