தவெக ஆட்சியில் செயற்கை மின்தடை மற்றும் மெகா ஊழல் திட்டம்: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
தமிழகத்தில் தவெக அரசு செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்குவதாகவும், ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 விலையில் மின்சாரம் வாங்க முயன்றதில் பெரும் முறைகேடு உள்ளதாகவும் மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் ஆளும் தவெக அரசு மற்றும் மின்சாரத் துறை மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், நிர்வாக ரீதியாகப் பல துறைகளிலும் தொடர் குளறுபடிகள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மின்சாரத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் விமர்சித்தார். தற்போதைய ஆட்சியில் மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் மின்வெட்டுப் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாகவும், இதனைச் சீரமைக்க அரசு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இந்த மின்வெட்டுப் பிரச்சினையானது தவெக அரசால் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்கையான மின் பற்றாக்குறை என எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார்
மின்சாரத் துறையில் நடைபெறவிருந்த மிகப் பெரிய நிதி முறைகேட்டையும் அவர் அம்பலப்படுத்தினார். தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50 என்ற மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்ய அரசு ரகசிய ஒப்பந்தம் போட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் ஒரு யூனிட் ரூ. 20-க்கு வாங்கியதையே ஊழல் என விமர்சித்தவர்கள், தற்போது ரூ. 41.50-க்கு வாங்கத் திட்டமிட்டது எப்படிச் சரியாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும், இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், வேறு வழியின்றி அந்த ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் பொறுப்பேற்ற பின்னரே, அந்தத் துறையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிர்வாகக் கேடுகள் அதிகரித்துள்ளதாக ஈபிஎஸ் சுட்டிக்காட்டினார். அமைச்சர் நிர்மல்குமார் மேடைகளில் வெறும் வீரவசனம் பேசுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்றும், அதை விடுத்துத் துறையைச் சீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0 Comments
No comments yet. Be the first to comment.