லிப்ட் கொடுப்பதாகக் கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க நிர்வாகி அதிரடி கைது!
நாகர்கோவிலில் கனமழையில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு, காரில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட த.வெ.க மாவட்ட நிர்வாகி கிறிஸ்டோபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது தோழியுடன் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குலசேகரம் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, தோழியுடன் சேர்ந்து பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால், இருவரும் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்து நின்றனர்.
அந்த நேரத்தில் மருந்துகோட்டை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் தனது காரில் அந்த வழியாக வந்துள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மத்திய மாவட்ட நிர்வாகியாக பொறுப்பில் உள்ளார். மழையில் தவிக்கும் மாணவிகளைப் பார்த்த அவர், இருவரையும் காரில் ஏறிக்கொள்ளுமாறும், பாதுகாப்பாக ஊரில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அவர் ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால், மாணவிகள் இருவரும் எந்த சந்தேகமுமின்றி அவரது காரில் ஏறியுள்ளனர்.
கார் தக்கலை பகுதியைச் சென்றடைந்ததும், ஒரு மாணவி தனது ஊர் வந்ததால் காரில் இருந்து பாதுகாப்பாக இறங்கிக் கொண்டார். அதன்பிறகு, குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவியை மட்டும் அவரது வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி கிறிஸ்டோபர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் காரை நிறுத்திய அவர், அந்த மாணவியிடம் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், உடனடியாக இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த கிறிஸ்டோபர் தலைமறைவானார். இருப்பினும், தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர், தற்போது அவரை அதிரடியாக கைது செய்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.