வெறும் 10 ரூபாய்க்கு வெளியான ரிலையன்ஸ் முதல் IPO: ஜியோவின் இமாலய சாதனைக்கு அடித்தளமிட்ட 49 ஆண்டு கால பயணம்!
சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO-வைத் தொடர்ந்து, 49 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 10 ரூபாய்க்கு வெளியான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் IPO-வின் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் அது முதலீட்டாளர்களுக்கு அளித்த லாபம் குறித்த ஒரு சிறப்புப் பார்வை.
சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' (Jio Platforms) நிறுவனத்தின் IPO, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அக்டோபர் 28-ஆம் தேதி பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் 24 சதவீதத்திற்கும் மேலான லாபத்தை ஜியோ அளித்துள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்று, உலகின் முதல் பொதுப்பங்கு வெளியீடு என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது.
இதற்கு முன்பு வாரி எனர்ஜீஸ் (Waaree Energies) நிறுவனம் 97 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. ஜியோவின் இந்த இமாலய வெற்றி, 49 ஆண்டுகளுக்கு முன்பு திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் IPO-வின் வரலாற்றை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது
முதல் தலைமுறை தொழிலதிபரான திருபாய் அம்பானியால் நிறுவப்பட்ட ரிலையன்ஸ் குழுமம், அதன் முதல் IPO-வை 1977-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. அப்போது அந்நிறுவனம் 'ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ்' (Reliance Textile Industries) என அழைக்கப்பட்டது. இந்த வெளியீட்டின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், எந்தவித கூடுதல் பிரீமியமும் இன்றி வெறும் 10 ரூபாய் முகமதிப்பிலேயே பொதுமக்களுக்குப் பங்குகள் வழங்கப்பட்டன. 28.2 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், சுமார் 7.19 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன.
இதன் மூலம் ரிலையன்ஸுக்கு 58,000 பங்குதாரர்கள் ஆரம்பத்திலேயே கிடைத்தனர். இது புதிய பங்குகளுக்கான வெளியீடாக இல்லாமல், நிறுவனத்தின் புரமோட்டர்களான திருபாய் அம்பானி மற்றும் அவரது சகோதரர் நட்வர்லால் அம்பானி ஆகியோர் தங்களது பங்குகளை விற்ற வெளியீடாக (Offer for Sale) அமைந்தது.
இந்த 1977 IPO-வில் முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய லாபம் காத்திருந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 10 ரூபாய் மதிப்புள்ள பங்கு, 17 முதல் 18 ரூபாய் வரை வர்த்தகமாகி சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை லாபத்தை அள்ளிக் கொடுத்தது. அதன்பிறகு பங்குகளின் விலை அபரிமிதமாக உயரத் தொடங்கியது.
அதே ஆண்டின் முடிவில் 50 ரூபாயாகவும், இரண்டு ஆண்டுகளில் 104 ரூபாயாகவும், நான்கு ஆண்டுகளில் 186 ரூபாயாகவும் பங்குகளின் விலை உச்சம் தொட்டது. முதலீட்டாளர்களுக்கு மாபெரும் லாபத்தைக் கொடுத்த இந்த நிறுவனம், பின்னர் 1985-ஆம் ஆண்டில் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' (Reliance Industries) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ரிலையன்ஸின் இந்த வளர்ச்சி குறித்து ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஹமிஷ் மெக்டொனால்டு 1998-ல் எழுதிய 'தி பாலியஸ்டர் பிரின்ஸ்' (The Polyester Prince) என்ற திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. 1980-களில் இந்தியாவில் பங்குகளை வைத்திருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால், 1985-ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த 40 லட்சம் பேரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரிலையன்ஸ் பங்குதாரர்களாகவே இருந்தனர். அதாவது, இந்தியாவில் பங்குகளை வைத்திருந்த ஒவ்வொரு நான்கு பேரிலும் ஒருவரிடம் ரிலையன்ஸ் பங்கு இருந்தது. இதன்காரணமாக, குறிப்பாக குஜராத் மக்களிடையே திருபாய் அம்பானி ஒரு கதாநாயகனைப் போன்ற மாபெரும் அந்தஸ்தைப் பெற்றிருந்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.