சிவகங்கையில் கொடூரம்: கடையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி தலையில் கல்லைப்போட்டு படுகொலை!
சிவகங்கை மாவட்டம் பாகனேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, கடையில் படுத்துறங்கிய 75 வயது மூதாட்டி பொன்னி என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பாகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள கடை ஒன்றின் அருகே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பொன்னி என்ற 75 வயது மூதாட்டி, மர்ம நபர்களால் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி பொன்னிக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். சமீபத்தில் இவரது கணவர் ஆறுமுகம் உயிரிழந்ததால், மூதாட்டி மிகுந்த மனவிரக்தியில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, பாகனேரி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருகிலுள்ள பேருந்து நிறுத்தக் கட்டடத்தின் ஓரமாகவே தங்கி உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
வழக்கம்போல் சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு கடையில் படுத்துறங்கிய மூதாட்டியின் தலையில், மர்ம நபர்கள் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். காலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த மூதாட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதகுபட்டி போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த கொடூரக் கொலையைச் செய்த மர்ம நபர்கள் யார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மதகுபட்டி போலீசார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.