ரூ. 634 கோடி முறைகேடு வழக்கு: என் மீது வீண்பழி சுமத்த வேண்டாம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜனனி!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய ரூ. 634 கோடி லஞ்ச விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவதை வன்மையாகக் கண்டித்துள்ள சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார், ஆதாரமற்ற பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என வேதனையுடன் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ-வுமான கே.என். நேரு தொடர்புடைய 25 இடங்களில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2,538 அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்ததில் சுமார் ரூ. 634 கோடி அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்த லஞ்ச விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் கைமாறிய பணம், பிரபல சின்னத்திரை நடிகைகளான ஜனனி அசோக் குமார் மற்றும் ஷபானா ஆகியோரின் வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வேகமாகப் பரவின. மேலும், இவர்களின் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி செய்திகள் வெளியாகின.
இந்த வீண் வதந்திகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை ஜனனி அசோக் குமார், குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ரூ. 634 கோடி ஊழல் விவகாரத்திற்கும் தனக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும், தான் எவ்வித அரசியல் கட்சியையோ அல்லது அரசியல்வாதிகளையோ சார்ந்தவள் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். எந்தவொரு பின்புலமும் இன்றி பல ஆண்டுகளாகத் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தனது கரியரும் மரியாதையும், இதுபோன்ற ஒரு பொய்ச் செய்தியால் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை முழுமையாக விசாரிக்காமலும், சம்பந்தப்பட்ட தன்னிடம் விளக்கம் கேட்காமலும் ஊடகங்கள் எப்படி செய்திகளை வெளியிடலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பெண்ணின் மீது எளிதாகப் பழிபோடும் இந்த சமூகத்தில் வாழ்வது மனச்சோர்வைத் தருவதாகக் கூறியுள்ள அவர், தன்னிடம் எவ்வித ஆதாரமும் இன்றி பரப்பப்படும் தவறான செய்திகளை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையும் ஆதாரமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒரு மனிதனின் சுயமரியாதையும் முக்கியம் எனக் கூறியுள்ள ஜனனி, இந்த இக்கட்டான நேரத்தில் தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.