பிறந்தநாளில் மாயமான செஞ்சி சிறுமி: 22 நாட்களாகியும் துப்பு கிடைக்காமல் சிபிசிஐடி திணறல்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமம் ஒன்றில் 7 வயது சிறுமி ஹேமலதா திடீரென காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு இரவு குடும்பத்தினருடன் தூங்கச் சென்ற சிறுமி, மறுநாள் அதிகாலை மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். சிறுமி காணாமல் போய் இன்றோடு 22 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவரைப் பற்றிய எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சிறுமி காணாமல் போன தகவல் அறிந்ததும் உள்ளூர் காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் வீட்டைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள், வயல்வெளிகள், விவசாயக் கிணறுகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடினர். இருப்பினும் இந்த தேடுதல் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், சிறுமியின் பெற்றோர் முதலமைச்சருக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கைக் கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் கடந்த 12 நாட்களாக தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமியின் தாயார், அப்பகுதியைச் சேர்ந்த சாமியார் மற்றும் சந்தேகத்திற்குரிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வளவு தீவிரமான முயற்சிகளுக்குப் பிறகும், 22 நாட்கள் கடந்த நிலையில் வழக்கில் சிறு துப்பு கூட கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் கடும் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற விடைதெரியாத இந்த மர்மம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.