டெல்லியில் கள்ள நாணயங்கள் தயாரிப்பு: 4 பேர் கைது
டெல்லியில் ரூ.20 போலி நாணயங்களைத் தயாரித்து விநியோகம் செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகள் மற்றும் போலி நாணயங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் கள்ள ரூ.20 நாணயங்களைத் தயாரித்து விநியோகம் செய்து வந்ததாகக் கூறப்படும் கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
காரில் கடத்தப்பட்ட போலி நாணயங்கள்
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, டெல்லியின் முண்ட்கா தொழிற்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே போலி நாணயங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கிச் சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த பராஸ் ஜெயின் (45) என்பவரிடம் இருந்து போலி ரூ.20 நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு பையில் 50 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருந்தன. ஒவ்வொரு பாக்கெட்டிலும் தலா 100 போலி நாணயங்கள் என மொத்தம் 5,000 நாணயங்கள் இருந்தன. இவற்றின் முகமதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
முக்கிய நபர் உட்பட 4 பேர் கைது
விசாரணையில், பஞ்சாபைச் சேர்ந்த உப்கார் லுத்ரா என்ற அபய் பிரதாப் சிங் (58) என்பவரிடம் இருந்து இந்த நாணயங்களை வாங்கியதாக பராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் முகமதிப்புள்ள போலி நாணயங்களை ரூ.70 ஆயிரத்துக்கு வாங்கி, அவற்றை சந்தையில் புழக்கத்தில் விட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹரியானாவின் சோனிபட்டில் செயல்பட்டு வந்த போலி நாணயத் தயாரிப்பு மையத்தை உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூருக்கு மாற்ற முயன்றபோது உப்கார் லுத்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் பிடிபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை
இந்தக் கும்பலிடமிருந்து போலி நாணயங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், போலி நாணயங்கள் எந்தெந்த பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்டன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 Comments
No comments yet. Be the first to comment.