பள்ளி மாணவர்கள் ரவுடிகள் போல் முடிவெட்டினால் மொட்டை அடியுங்கள்: அமைச்சர் பேச்சால் வெடித்த சர்ச்சை!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி விழாவில், மாணவர்கள் முறையாக முடிவெட்டி வராவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என்று அமைச்சர் பேசியது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அயன் ரெட்டியபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சரண்யா ஹரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சுற்றுச்சுவர் பணிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளிக் குழந்தைகளின் தற்போதைய சிகை அலங்காரம் குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள் ரவுடிகளைப் போல வித்தியாசமாக முடிவெட்டி வருவதைப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த முறையற்ற சிகை அலங்காரங்களை ஆரம்பத்திலேயே திருத்தம் செய்தாக வேண்டும்," என்று அவர் கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் ஃபார்மல் கட்டிங் (Formal cutting) முறையில் முறையாக முடி வெட்டி வந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். தப்புத் தப்பாக முடிவெட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் மொட்டை அடியுங்கள்; அதில் எந்தத் தப்பும் இல்லை. உங்கள் வீட்டுப் பிள்ளைகளை என் பிள்ளையாக உரிமை நினைத்து இந்த அறிவுரையைச் சொல்கிறேன். ஏனெனில் மாணவர்களின் முதல் தவறே இங்கிருந்துதான் தொடங்குகிறது," என்று மிகவும் காட்டமாகத் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியிருந்தாலும், ஒரு பொது மேடையில் "மொட்டை அடியுங்கள்" என அவர் வெளிப்படையாகப் பேசிய வார்த்தைகள் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகி பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.