கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு காலமானார்: 70 நாட்களுக்கும் மேலான சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சென்னை கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் (MGM Healthcare) அவர் அனுமதிக்கப்பட்டார்.70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் கவனம் ஈர்த்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபுவை, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார்.அதன்பின்னர் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், விளக்கம் கேட்டு கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்றுதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாகத் தொடர் சிகிச்சையில் இருந்த எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு தற்போது காலமாகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும், கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவுக்குத் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.