சென்னை,
தங்க நகைகளை விற்பனை செய்வதாகக் கூறி பெற்றுக்கொண்ட பணத்தில் ரூ.10 லட்சத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் மீது தொலைக்காட்சி நடிகர் முகமது குரேஷியின் மனைவி சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
92.73 கிராம் தங்க நகைகள்
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் டி.வி. நடிகர் முகமது குரேஷி. இவரது மனைவி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.
இவரது மனைவி சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், தனது '92.73 கிராம்' எடையுள்ள தங்க நகைகளை காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்வதற்காக வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் வழங்காமல் இழுத்தடிப்பு
தங்க நகைகளுக்கு ரூ.14 லட்சம் தருவதாக அந்த நபர் உறுதியளித்ததாகவும், அதன்படி முதற்கட்டமாக ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.10 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் தன்னிடம் நகைகளைப் பெற்றுக்கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை
இந்தப் புகார் தொடர்பாக அண்ணா சாலை போலீசார், புகார்தாரருக்கு சி.எஸ்.ஆர். ரசீது வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தன் மீதான புகார் குறித்து சம்பந்தப்பட்ட நபர் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புகாரில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையானவையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், இருதரப்பினரின் புகார் மற்றும் விளக்கங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இந்த விவகாரத்தின் முழு விவரங்கள் தெரியவரும்.

0 Comments
No comments yet. Be the first to comment.