அல்லு அர்ஜுனுடன் ஹாட்ரிக் கூட்டணி? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் 'AA23' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவரது கைவசம் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்', 'Hai Jawani Toh Ishq Hona Hai' (ஹிந்தி) மற்றும் 'காஞ்சனா 4' ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ள சூழலில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூஜா - அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் கூட்டணி
தமிழ் திரையுலகைத் தாண்டி தெலுங்கிலும் பூஜா ஹெக்டேவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே ஜோடி ஆன்-ஸ்கிரீனில் ஒரு 'பிளாக்பஸ்டர் ஜோடி' என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'DJ: துவ்வாடா ஜகன்னாதம்' மற்றும் 'அலா வைகுந்தபுரமுலூ' ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தன. இவர்களது கெமிஸ்ட்ரி திரையில் பெரிதும் ரசிக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'AA23'
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிரடி தகவல் என்னவென்றால், பூஜா ஹெக்டே மூன்றாவது முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் தான் 'AA23'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஹாட்ரிக் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது உறுதி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.