"ஆவின் தலைவர் ரூ.50 லட்சம்... அரசு வழக்கறிஞர் ரூ.30 லட்சம்!" - பதவியேற்ற அன்றே த.வெ.க-வில் ‘விலைப்பட்டியல்’... அதிர்ச்சியில் விழுப்புரம் நிர்வாகிகள்!
"ஊழலற்ற ஆட்சி தருவோம் எனக்கூறி விஜய் முதல்வரான அன்றே, விழுப்புரம் மாவட்ட த.வெ.க-வினர் அரசுப் பதவிகளுக்கு விலைப்பட்டியல் போட்டு வசூலில் குதித்துவிட்டனர்" என சொந்த கட்சி நிர்வாகிகளே வாட்ஸ்அப் ஆடியோ ஆதாரத்துடன் குமுறும் பரபரப்பு பின்னணி.
"ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை மக்களுக்குக் கொடுப்போம்" என்ற ஒற்றை நம்பிக்கையை முன்வைத்து, தமிழக மக்களின் பேராதரவோடு அண்மையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய். மே 10-ம் தேதி அவர் பதவியேற்ற நிகழ்வு அக்கட்சியினரால் திருவிழா போல் கொண்டாடப்பட்டது. ஆனால், அவர் முதல்வராக அரியணை ஏறிய அன்றைய தினமே, அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் அரசுப் பதவிகளையும், கவுன்சிலர் சீட்டுகளையும் கோடிக்கணக்கில் விலை பேசி வசூலில் குதித்துள்ளதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் 4 நிமிட ஆடியோ... அம்பலமான உட்கட்சிப் பூசல்!
விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற மறுநாளே (மே 11), விழுப்புரம் மாவட்ட த.வெ.க வாட்ஸ்-அப் குழுக்களில் சுமார் 4.1 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்று மின்னல் வேகத்தில் பரவியது.
அந்த ஆடியோவில் கோலியனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மைக்கேல் அந்தோணிராஜ் பேசியிருப்பதாவது: "தமிழக வெற்றிக் கழகம், விழுப்புரம் தெற்கு மாவட்டம், கோலியனூர் கிழக்கு ஒன்றியம் சார்பாகப் பேசுகிறேன். கடந்த ஒரு வாரமாக மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நம் கட்சிக்கு அதிகமாக வந்துகொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு, நம் மாவட்ட (செயலாளரிடம்) பணம் கொடுத்துவிட்டு கட்சியில் இணைந்ததாக அவர்கள் தகவல் பரப்பிவருகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது இரண்டு ஊர்களில் இந்த விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கும் அது தெரியும். அதை நம்பாதீர்கள். இருக்கும் நிர்வாகிகளை நம் மாவட்டச் செயலாளர் எப்போதும் கைவிட மாட்டார். நம்பிக்கையுடன் இருங்கள்."
இந்த ஆடியோ வெளியானது முதலே, விழுப்புரம் மாவட்ட த.வெ.க-வுக்குள் புகைந்துகொண்டிருந்த அனல், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பதவிகளுக்கு ‘ரேட் கார்டு’: நிர்வாகிகள் குமுறல்!
இது குறித்து விழுப்புரம் மாவட்ட த.வெ.க-வைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் சிலர் நம்மிடம் தங்களது குமுறல்களைப் பகிர்ந்துகொண்டனர்:
- ஆவின் தலைவர் பதவி: ரூ. 50 லட்சம்
- அரசு வழக்கறிஞர் பதவி: ரூ. 30 லட்சம்
- உள்ளாட்சித் தேர்தல் கவுன்சிலர் சீட்: தனி விலைப்பட்டியல்
"கட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்து, எத்தனையோ சோதனைகளைக் கடந்து விஜய்க்காக உழைத்த எங்களை ஓரங்கட்டிவிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களிடம் லட்சக்கணக்கில் மாவட்ட நிர்வாகம் பேரம் பேசி வருகிறது. தலைவர் விஜய் மிகத் தூய்மையான அரசியலை விரும்புகிறார். ஆனால், அடிமட்ட அளவில் நடக்கும் இந்த 'வசூல் வேட்டை' அவரது பெயருக்கும், கட்சிக்கும் கலங்கத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டச் செயலாளரின் இந்த அதிரடி வசூலைத் தலைமை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணன் யாரையும் கைவிட மாட்டார்...’ - சமாதானப் பின்னணி
மாற்றுக்கட்சியினர் பணத்தைக் கொடுத்துவிட்டு பதவிகளைப் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் பழைய த.வெ.க நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தவே இந்த ஆடியோ வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. "பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் உழைத்தவர்களுக்குப் பதவி உண்டு; அண்ணன் யாரையும் கைவிட மாட்டார்" என்று ஆடியோவில் கூறப்பட்டாலும், 'பணப் பரிமாற்றம்' நடப்பது உண்மைதான் என்பதை இந்த ஆடியோ மறைமுகமாக உறுதிப்படுத்துவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுப்பாரா அல்லது ஆரம்பத்திலேயே இந்த ஊழல் புகார்கள் கட்சியின் இமேஜைப் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 Comments
No comments yet. Be the first to comment.