நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்... ‘தெருக்குரல்’ அறிவு கைது!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா மற்றும் தனியிசை பாடகர் ‘தெருக்குரல்’ அறிவுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற திடீர் போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா மற்றும் தனியிசை பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடர்பான எதிர்ப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் பேரணி பெரும் கவனத்தை ஈர்த்தது. காக்ரோச் ஜனதா பார்டி சார்பில் நடைபெற்ற அந்த போராட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் பேரணியை கலைத்ததாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியதுடன், பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த சூழலில், சென்னை தலைமைச் செயலகம் முன்பாக ராப் பாடகரும், திரைப்பட பாடலாசிரியருமான ‘தெருக்குரல்’ அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேலும் சிலர் இணைந்து கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ‘தெருக்குரல்’ அறிவு உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நீட் தேர்வு தொடர்பான விவாதம் தொடர்ந்து தேசிய அளவில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ‘தெருக்குரல்’ அறிவுவின் கைது சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.