ரூ.710 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.710.50 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.112.85 கோடி செலவில் முடிக்கப்பட்ட 4 திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ரூ.112.85 கோடி செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.710.50 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாநகராட்சியில் புதிய மேம்பாலம்
திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
ரூ.18 கோடி செலவில் திருப்பூர் மாநகராட்சி வார்டு 44-க்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் சாலை, ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலை மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே இந்த உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்துறை நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் நோக்கில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.22.65 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 10,080 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, நகரம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
கோத்தகிரியில் ரூ.42.69 கோடியில் குடிநீர் திட்டம்
கோத்தகிரி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.42.69 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 11.40 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் பிரதான விநியோகக் குழாய்கள் மற்றும் 48.64 கி.மீ. நீளத்திற்கு பகிர்மானக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 6 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், தடுப்புச் சுவர் மற்றும் 40 கி.மீ. நீளத்திற்கு சாலை மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3,596 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் அளவிற்கு குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.