இந்திய சினிமாவிலேயே முதல்முறை.. 12,000 திரைகளில் வெளியாகும் ‘டாக்ஸிக்’
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீடாக இது அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீடாக இப்படம் உருவாகியுள்ளது.
கே.ஜி.எஃப் இயக்குநர் இயக்கத்தில் யாஷ்
‘கே.ஜி.எஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள யாஷ், தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யாஷுடன் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கோவா மாஃபியா பின்னணி
1940 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்ற டீசர்
‘டாக்ஸிக்’ டீசர் மற்றும் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் அதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. அதேநேரத்தில், யாஷ் மற்றும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
‘ஏ’ சான்றிதழ்.. 3 மணி நேரத்துக்கும் மேல் ஓட்டம்
ரத்தம் தெறிக்கும் வகையிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12,000 திரைகளில் பிரம்மாண்ட ரிலீஸ்?
இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய திரை வெளியீடாக இப்படத்தை கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘டாக்ஸிக்’ படத்திற்கான முன்பதிவு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாஷின் பான் இந்தியா மார்க்கெட்டுக்கு இந்த பிரம்மாண்டமான வெளியீடு மேலும் வலு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

0 Comments
No comments yet. Be the first to comment.