சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஒரு வார காலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட களப்பிரிவுகளுக்கு கிடைத்த 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரே வாரத்தில் 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து தயக்கமின்றி காவல்துறையிடம் புகார் அளிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் துரித நடவடிக்கைகள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.