ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்காக ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குடும்பங்களின் சமையல் செலவைக் குறைக்கும் வகையில் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.
விலையில்லா சிலிண்டர்
பொங்கல் பண்டிகை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி அளவில் நிதி ஒதுக்கப்படும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களின் அத்தியாவசிய செலவுச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் உள்ளிட்ட பிரிவுகளும் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.