முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு: சேகர்பாபு மீது வழக்குப்பதிவு
முதல்வர் விஜய் குறித்து அவதூறு: சேகர்பாபு மீது வழக்குப்பதிவு! திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களை குறிப்பிட்டு, திமுகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டபோது, அவரை கைது மூலம் உருவாக்கியதாக கூறப்படும் விதமாக முதலமைச்சர் விஜய் பேசியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாகவும், அவரது பேச்சு தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.