அமெரிக்காவில் தகவல் தொடர்பு கேபிள் துண்டிப்பு: 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ரயில்வே கட்டுமானப் பணியின்போது ஆப்டிகல் பைபர் கேபிள் எதிர்பாராதவிதமாக துண்டிக்கப்பட்டதால், வடகிழக்கு அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நியூவர்க் விமான நிலையத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல விமானங்கள் தாமதமாகின மற்றும் சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
அமெரிக்கா:
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகின.
பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் (FAA) முக்கிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் முதன்மை தகவல் தொடர்பு இணைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று இணைப்பை பயன்படுத்த முயன்றபோது, நியூ ஜெர்சியில் ரயில்வே கட்டுமானப் பணிகளின்போது துண்டிக்கப்பட்டிருந்த ஆப்டிகல் பைபர் கேபிள் செயல்படவில்லை என்பது தெரியவந்தது.
நியூ பிரன்ஸ்விக் மற்றும் நியூவர்க் இடையே ரயில் பாதைக்கு அருகே சென்றுகொண்டிருந்த சுமார் 600 அடி நீளமுள்ள தகவல் தொடர்பு கேபிள், கட்டுமானப் பணியின்போது தொழிலாளர்களால் எதிர்பாராதவிதமாக துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேபிள் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நியூ ஜெர்சி டிரான்சிட் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தகவல் தொடர்பு இணைப்பு பாதிக்கப்பட்டதால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் தேவையான ரேடார் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக FAA சில விமானப் போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் நியூவர்க், ஜான் எப். கென்னடி, லாகார்டியா, பிலடெல்பியா மற்றும் டெட்டர்போரோ உள்ளிட்ட விமான நிலையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நியூவர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா விமான நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் சேதமடைந்த தகவல் தொடர்பு இணைப்புகள் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு அமெரிக்க விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கின. இருப்பினும், ஏற்கனவே ஏற்பட்ட விமான ரத்து மற்றும் தாமதங்களின் தாக்கம் அடுத்தடுத்த விமானங்களிலும் தொடர்ந்தது. பயணிகள் தங்களது விமான நிறுவனங்களிடம் விமான நிலையை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.