தமிழகத்தில் 36 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.73 கோடி மதிப்பிலான பணம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.13.78 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.1.59 கோடி மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதால், மொத்தம் ரூ.1.73 கோடிக்கும் அதிகமான தொகை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட இந்தச் சோதனைகளில் ரூ.13,78,207 கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடன்,
G-Pay மூலம் ரூ.1,59,70,459 மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.1,73,48,666 மதிப்பிலான பணம் மற்றும் பரிவர்த்தனைகள் சோதனையில் சிக்கியுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் சோதனை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
சென்னையில் பெருங்குடி மாநகராட்சி மண்டல அலுவலகம், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், மாதவரம் மண்டல அலுவலகம், பல்லாவரம் நகராட்சி மற்றும் ஆலந்தூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.7,64,500 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செய்யாறு நகராட்சியில் ரூ.1.90 லட்சம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.1.38 லட்சம், மதுரை மாநகராட்சி பொறியாளர் பிரிவில் ரூ.1.35 லட்சம் உள்ளிட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
G-Pay பரிவர்த்தனைகள் ஆய்வு
இந்தச் சோதனையின் முக்கிய அம்சமாக பல்வேறு அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட G-Pay பரிவர்த்தனைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன.
பெருங்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.43.42 லட்சம், வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.19.16 லட்சம், காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.19.66 லட்சம், மறைமலைநகர் நகராட்சியில் ரூ.14.56 லட்சம் மற்றும் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.10 லட்சம் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி ரசீது புத்தகங்களும் பறிமுதல்
ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அசல் ரசீதுகளுக்கு பதிலாக போலி ரூ.20 கட்டண ரசீதுகள் வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் தலா 100 ரசீதுகள் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.12,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் கண்டறியப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.