மீசைய முறுக்கு 2: கானா இசையை பெருமைப்படுத்திய ஆதியை நேரில் அழைத்து பாராட்டிய தேவா! 4 நாட்களில் 51 கோடி வசூல் சாதனை!
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படத்தில் கானா இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை கண்டு நெகிழ்ந்த தேனிசைத் தென்றல் தேவா, ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தனிஇசைத் துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமைகளுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
ரூ.51 கோடி வசூல் சாதனை:
2017ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் தொடர்ச்சியாக, தற்போது 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் வெளியாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்துள்ள இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கானா இசையை பெருமைப்படுத்திய 'மீசைய முறுக்கு 2':
இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க கானா இசையைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், கானா பாடல்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளித்த 'தேனிசைத் தென்றல்' தேவாவை கௌரவிக்கும் வகையிலும் நடிகர் கருணாஸ் மூலமாக முக்கிய வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஹிப்ஹாப் ஆதியை பாராட்டிய இசையமைப்பாளர் தேவா:
இத்திரைப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் சுவாரசியமான திரைக்கதையையும், கானா கலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் கண்டு பெரிதும் நெகிழ்ந்துள்ளார். இந்த நிலையில், தேவா ஆதியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஆதி, "இது போதும் எனக்கு... இது போதுமே... கரையிலிருந்து கானாவை திரைக்கு எடுத்துச் சென்ற ஹீரோ ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பார்த்து பாராட்டியதுதான் இந்த படத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அங்கீகாரம்" எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.