6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? அக்டோபர் 1 முதல் அட்டை தற்காலிகமாக முடக்கம்!
கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களைப் பெற பயன்படுத்தப்படாத ரேஷன் அட்டைகளின் சலுகைகளை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பயனாளிகள் இந்த நடவடிக்கையின் கீழ் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத, போலியான அல்லது தகுதியற்ற பயனாளிகள் தொடர்பான பதிவுகளை சரிபார்த்து பொது விநியோகத் திட்ட தரவுகளை சீரமைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக ரத்து செய்யப்படுமா?
6 மாதங்களாக ரேஷன் வாங்காதவர்களின் அட்டை உடனடியாக நிரந்தரமாக ரத்து செய்யப்படாது. முதற்கட்டமாக ரேஷன் சலுகைகள் தற்காலிகமாக முடக்கப்படும். அதன் பின்னர் தகுதியை உறுதி செய்வதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலகட்டத்தில் பயனாளிகள் e-KYC உள்ளிட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தேவையான இடங்களில் கள ஆய்வும் நடத்தப்பட்டு, பயனாளி தகுதியானவர் என்பது உறுதி செய்யப்பட்டால் ரேஷன் அட்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
யாருக்கு பாதிப்பு?
தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்கி வரும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த 6 மாத பயன்பாடின்மை நடவடிக்கையின் கீழ் வருவதில்லை. குறிப்பாக, நீண்ட காலமாக ரேஷன் கடைக்குச் செல்லாத குடும்ப அட்டைகளே சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.
எனவே, கடந்த 6 மாதங்களாக ரேஷன் வாங்காதவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நிலை மற்றும் e-KYC விவரங்களை சரிபார்த்துக் கொள்வது அவசியம். தேவையான நடவடிக்கை குறித்து அருகிலுள்ள நியாய விலைக் கடை அல்லது சம்பந்தப்பட்ட உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

0 Comments
No comments yet. Be the first to comment.