ஞானேஷ் குமார் மீதான 20 ஆண்டு பழைய புகார் மீண்டும் விசாரணை – கேரள அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றிய 2006-ம் ஆண்டு தொடர்பாக எழுந்ததாக கூறப்படும் லஞ்சப் புகார் குறித்து கேரள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.215 கோடி மதிப்பிலான எம்.சி. சாலை மறுகட்டமைப்பு பணிகளில் முறைகேடு மற்றும் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கைக்கு கேரளத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் மனோஜ் ஆபிரகாமிடம் விரிவான விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான விவகாரங்களில் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
2006-ம் ஆண்டு எழுந்ததாக கூறப்படும் புகார்
கேரள பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானேஷ்குமார், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு முன்பு கேரள அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு மாநில பொதுப்பணித்துறை செயலாளராக அவர் பணியாற்றியபோது, நெடுஞ்சாலைப் பணிகளுக்கான நிதியை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
ரூ.215 கோடி நெடுஞ்சாலை திட்டம்
2006-ம் ஆண்டு அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலை மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ.215 கோடி மதிப்பில் நடைபெற்ற இந்தப் பணிகளை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் திட்ட பொறியாளராக பணியாற்றிய லீ சீ பீன், சாலைப் பணிகள் தொடர்பாக பல்வேறு புகார்களை எழுப்பியதாகவும், பின்னர் தனது தாயகம் திரும்பிய அவர் அங்கு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ்குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக கேரள உள்துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பணம் விடுவிப்பதில் முறைகேடு?
சாலைப் பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒப்பந்த நிறுவனத்துக்கான பணத்தை விடுவிப்பதில் லஞ்சம் கோரப்பட்டதாகவும், பணம் வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டதாகவும் புகாரில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட புகாரில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரிக்கவும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் சென்னிதலா விளக்கம்
இந்த விவகாரம் குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ஞானேஷ்குமாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அவசியம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்-மந்திரி சதீசனுடன் ஆலோசனை நடத்திய பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மனோஜ் ஆபிரகாமிடம் விரிவான விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றிய காலத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் என்பதால், இந்த விவகாரத்தில் தற்போதைய பதவிக்குரிய சட்டப் பாதுகாப்பை கோர முடியாது என்றும் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் வரவேற்பு
ஞானேஷ்குமாருக்கு எதிரான பழைய புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை கேரளத்தின் முக்கிய அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
கேரளத்தில் ஞானேஷ்குமாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முறையாக விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.